Saturday, 4 February 2012

இலங்கையின் சுதந்திரதினம் தமிழர்களுக்கு ஒரு கேடா!


அது ஒரு காலம்... இலங்கையில் தமிழர்களுக்கு என்று ஒரு தனி இராஜ்ஜியம் இருந்தது... அதை இலங்கையின் வழிவந்த தமிழ் மன்னர்கள் வெற்றிகரமாக ஆண்டு கொண்டிருந்தார்கள்.

வணிக நோக்கோடு அங்குள்ள வளங்களைச் சுரண்டும் நோக்கில் வெளிநாடுகளில் இருந்து போர்த்துக்கேயர்கள், ஒல்லாந்தர்கள், ஆங்கிலேயர்கள் முறையே இலங்கைக்கு வருகை தந்தனர்.

அவர்களுக்கு யாழ்ப்பாணத்தில் இருந்த தமிழ் மன்னராட்சி மிகப்பெரிய இடையூறாக இருந்தது.

இதனால் அவர்கள் எவ்வளவோ முயற்சித்து தமிழ் இராஜ்ஜியத்தை இல்லாமல் செய்தார்கள்.

அதிலும் ஆங்கிலேயர்கள் இலங்கையை இலகுவாக நிர்வகிக்கும் பொருட்டு எல்லா இராச்சியங்களையும் ஒன்றாக இணைத்து சிறிலங்கா எனும் பெயரில் ஆளத் தொடங்கினார்கள். அது தான் இன்றைய இலங்கை.

ஆனால் உண்மையில் நாங்கள் பார்க்கப் போனால் இலங்கையில் ஒரு தமிழ் இராஜ்ஜியம் தமிழ் மக்கள் தங்கள் சொந்த நிலத்திலே, சொந்தக் கொடியின் கீழ், சொந்த ஆளுகையின் கீழ் ஆங்கிலேயர் ஆட்சிக்காலம் வரை இருந்தார்கள் என்பது தான் வரலாறு.

1948 ஆம் ஆண்டு பெப்ரவரி நான்காம் திகதி இலங்கை சுதந்திரம் அடைந்தது.

இலங்கை சுதந்திரம் அடைந்தது என்றால் அப்போதைய இலங்கையில் இருந்த இரண்டு மிகப்பெரிய இனக்குழுக்களுக்குள்ளே பெரும்பான்மை இனக்குழுவான சிங்களவர்களுக்கு மட்டும் ஆங்கிலேயர்கள் அதிகாரங்களை வழங்கி விட்டுச் சென்றமை ஆகும்.

மிகச் சரியாகச் சொல்லப் போனால் ஆங்கிலேயர்கள் இலங்கைத் தமிழருக்கு மிகப்பெரிய துரோகம் செய்து விட்டுப் போன நாள் தான் பெப்ரவரி நான்காம் திகதி.

ஆட்சியைப் பகிர்ந்தளிக்காமல் அன்று ஆங்கிலேயர் விட்ட மாபெரும் தவறானது ஈழம் கொழுந்து விட்டு எரிவதற்கு வழி கோலியது.

அந்தக் கோரத்தின் தொடர்ச்சி தான் ஏறத்தாழ ஆறு இலட்சம் மக்களையும் ஒரு வலுவுள்ள இளைய சந்ததியினையும் கொடூரமாக அழித்து விட்டுச் சென்று விட்டது.

இலங்கையின் 64 அவது சுதந்திர தினத்தை மகிழ்ச்சியுடன் கொண்டாடிக்கொண்டிருக்கின்ற நண்பர்கள் தயவு செய்து நீங்கள் கடந்து வந்த வரலாற்றுப் பாதையினைச் சற்றுத் திரும்பிப் பாருங்கள்.

நாங்கள் தனி இராச்சியமாக இருந்தோம். எங்களுக்கு என்று தனி நாடு இருந்தது. எங்களுக்கு என்று தனிப்படை இருந்தது.

அந்தப் படைகளுக்கு எல்லாம் ஆப்பு வைத்து முற்று முழுதாக தமிழ் இராஜ்ஜியத்தையே இல்லாமல் செய்த நாள் தான் 1948 ஆம் ஆண்டு, பெப்ரவரி மாதம், நான்காம் திகதி.

இது உண்மையில் எமது சுதந்திர தினம் அல்ல.. இலங்கைத் தமிழர்களைப் பொறுத்த வரைக்கும் இது ஒரு அடிமைத் தனத்துக்கு வித்திட்ட ஆரம்ப நாள்.

இதை மகிழ்ச்சியாகக் கொண்டாடாடிக்கொண்டிருக்கின்ற எனதருமை தமிழ் சகோதரர்களே நீங்கள் ஒன்றை விளங்கிக் கொள்ள வேண்டும்.

ஆண்ட மண்ணை நாங்கள் மீளவும் ஆள்வதற்காக நீதியான முறையிலே நாங்கள் ஆரம்பித்த போராட்டம் எங்களுடைய தவறுகளினாலும் நாம் எமது போராட்டத்தின் நீதியை சர்வதேசத்துக்கு கொண்டு செல்லாத காரணத்தாலும் அது படு தோல்வியில் முடிவடைந்தது. நீங்கள் அனைவரும் அறிந்ததே.

இன்றைய சுதந்திர தின நிகழ்வில் சிங்களப் படைத்தளபதிகள் புடை சூழ இறுமாப்பில் அமர்ந்திருக்கும் மஹிந்தர்...!


சுதந்திரத்துக்கான போராட்டம் என்பது தனியே விடுதலைப் புலிகள் மாத்திரம் ஆரம்பிக்கவில்லை.. 80 களில் இருந்த அத்தனை இளைஞர்களும் விடுதலைக்காகப் போராடினார்கள்.

வெவ்வேறு தமிழர் போராட்டக் குழுக்களில் இணைந்து போராட்டங்களை முன்னெடுத்தார்கள்.

பின்பு அந்தப் போராட்டமானது வலியது பிழைத்துக் கொள்ளும் என்ற கொள்கைக்கு இணங்க இறுதியில் புலிகள் அதனை முன்னிலைப்படுத்திப் போராடினார்கள். ஆனால் இறுதியில் சர்வதேசம் செய்த சூழ்ச்சியினாலும் நாங்கள் செய்த சில தவறுகளாலும் போராட்டம் படுதோல்வியைத் தழுவியது.

இதனால் நாங்கள் அடைய வேண்டி இருந்த உண்மையான இலக்கு அதாவது நாங்கள் 1800 களில் ஆண்டு கொண்டிருந்த உண்மையான தமிழ் இராஜ்ஜியத்தை மீண்டும் அடைவதற்கான முயற்சிகள் எல்லாம் சுக்கு நூறாகிப் போய்விட்ட நிலை கவலைக்குரியது.

எத்தனை நூற்றாண்டு சென்றாலும் புலிகளால் முன்னெடுக்கப்பட்டது போன்ற மாபெரும் போராட்டம் ஒன்று இனி வருங்காலங்களில் சாத்தியம் இல்லை என்பது என்னுடைய கருத்து.

நாங்கள் இனி சிங்களவர்களுக்கு அடிமையாக இருந்து கொண்டு அவர்கள் கொண்டாடும் சுதந்திரதினத்தை எங்களுடையது என எண்ணி புழுகத்துடன் கொண்டாடிக் கொண்டிருக்க வேண்டிய கேவலமான நிலைக்கு நானும் நீங்களும் தள்ளப்பட்டுள்ளோம்.

ஆனால் நாங்கள் இந்த நிலையில் இருந்து மீளலாம்..

அப்படி மீள்வதற்கு நாம் எமது சமூகத்தை கல்வியால், பொருளாதாரத்தால், தமிழ் மக்களின் அடிப்படைக் கட்டமைப்புக்களில் மிகப்பெரிய மாற்றங்களை உண்டுபண்ணி வருவோமானால் எங்களுக்கு சாத்தியம் இல்லாமல் போன ஈழம் என்றோ ஒருநாள் சாத்தியமாகும் என்பதில் ஐயமில்லை.

வெள்ளையர்கள் எமக்கென்று நீதியான இராஜ்ஜியத்தை வழங்காமல் சூழ்ச்சியினால் சிங்களவர்களுக்கு தாரை வார்க்கப்பட்டதன் காரணத்தினால் எங்களுடைய எண்ணற்ற இளைஞர்கள் கொல்லப்பட்டனர், எண்ணிக்கையற்ற பெண்கள் கற்பழிக்கப்பட்டனர், அதற்கும் மேலாக மாபெரும் இனபடுகொலை அரங்கேறியது.

அதிலும் உச்சக்கட்டமாக ஒரே நாளில் 40000 க்கும் மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டு ஒரேயடியாக மண்ணில் புதைக்கப்பட்டனர். அதிலுள்ள சோகம் என்னவென்றால் முள்ளிவாய்க்காலில் தமிழர்களை நயவஞ்சகமாக கொன்று வெற்றி வாகை சூடிய நாளாக சுதந்திர தினத்தைப் சிங்களப் பேரினவாதிகள் பார்க்கின்றமை தான்.


இவ்வளவையும் தாங்கிக் கொண்டு இன்னமும் நாங்கள் மனிதர்களாக வாழ்ந்து கொண்டு இருக்கின்ற வேளையிலே எம்மைப் பார்த்து தங்களுடைய சுதந்திர தினத்தில் பங்கு கொள்ள வேண்டும் என்று அரசோ அவர்களின் அடிவருடிகளோ அழைப்பது எவ்வளவு ஒரு கேவலமான விடயம் என்பதை வாசிக்கின்ற நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்..

நாங்கள் என்றுமே இலங்கையை ஒரு நாடு என்று ஏற்றுக் கொள்ள முடியாத நிலையில் இருக்கின்றோம். ஏனென்றால் நாங்கள் எமது நீதியான தனி நாட்டுக்காக ஏறத்தாள ஆறு இலட்சம் தமிழ் மக்களைப் பலி கொடுத்து விட்டோம்.

இவ்வளவு உயிர்களையும் இழந்து விட்டு சிறிலங்காவின் சுதந்திர தினத்தன்று எலும்புக்காக திரிகின்ற நாய் போல நீங்கள் தரப்போகின்ற சலுகைக்காக எமது மானத்தை எல்லாம் அடகு வைத்துவிட்டு நாம் இலங்கையர் என்று சொக்கலேட் கொடுத்துக் கொண்டு திரிய வேண்டுமென சிலர் எதிர்பார்ப்பதை நினைக்கையில் எனக்கு சத்தியமாக இரத்தக் கண்ணீர் வருகின்றது.

இன்றைக்கு சுமார் 64 வருடங்களுக்கு முன்னர் தான் அடிமை வாழ்க்கைக்கு எம்மைத் தயார்ப் படுத்திக் கொண்டோம், எம்மைப் பழக்கப்படுத்திக் கொண்டோம்.

நாம் எம்மை ஆண்டுகொண்டிருந்த காலங்களை விட்டுவிட்டு சிங்களப் பேரினவாதிகளின் கீழ் ஆளப்பட்டுக் கொண்டிருக்கும் இந்த நாள் என்னைப் பொறுத்தவரை இது ஒரு துக்க நாள்...

இலங்கையின் 64 ஆவது சுதந்திர தினமான இன்றைய தினம் எடுக்கப்பட்டு நீங்கள் கீழே பார்க்கின்ற படங்களில் காணப்படுகின்ற எல்லோருமே சிங்களவர்கள் தான்...

No comments:

Post a Comment