Saturday, 9 February 2013

கவலைகளைத் தவிர்க்க என்ன செய்யலாம்?


இரண்டாம் உலகப் போரின்போது இங்கிலாந்து பிரதமர் வின்ஸ்டன் சர்ச்சில் தினமும் 18 மணி நேரம் உழைப்பாராம்.

சூரியன் அஸ்தமிக்காத பேரரசின் அதிபருக்கு அந்த அளவுக்கு ஏராளமான பொறுப்புகள்.

அப்போது நிருபர்கள் அவரிடம், 'குவிந்துகிடக்கும் பணிச் சுமைகள் உங்கள் முகத்தில் சின்ன வருத்த ரேகையைக்கூடத் தோற்றுவிக்கவில்லையே... எப்படி?’ என்று கேட்டனராம்.

அதற்கு சர்ச்சில் சொல்லியிருக்கிறார்... 'எனக்குக் கவலைப்படுவதற்கே நேரம் இல்லை.’ (I am too busy to worry!)

வேலை இல்லாதோரின் உள்ளம்தான், வேதனைகளின் வேட்டைக் காடு. மறக்காதீர்கள்...

மறந்தும் சும்மா இருக்காதீர்கள்!

Thursday, 24 January 2013

கமலுக்கு நேர்ந்த நிலை அன்று நடிகவேள் எம்.ஆர்.ராதாவுக்கு நேர்ந்திருந்தால் என்ன செய்திருப்பார்?



இதைவிட பெரும் கஷ்டம் அனுபவித்​தவர் ராதா. அவரது நாடகம் நடக்கும் போதே பாம்பு, மாடு, நாய்களை உள்ளே விரட்டி விடுவார்கள்.

ராதா மேடையில் தோன்றியதும் கல், கம்பு, சோடா பாட்டில் வீசப்படும். அத்தனையும் சமாளித்துத்தான் ராதா நாடகங்கள் நடத்தினார்.

அவரது அனைத்து நாடகங்களையும் தடை போட்டார்கள்.

ஒரு நாடகத்தை தடை செய்ததும் அதே நாடகத்தை வேறு பெயரில் நடத்துவார்.

அவரது நாடகங்களை முழுமை​யாகத் தடை செய்வதற்கென்றே ஒரு சட்டத்தை அன்றைய காங்கிரஸ் அரசாங்கம் கொண்டு வந்தது.

 பொது அமைதியைக் கெடுக்கிறார், சட்டம் ஒழுங்கைக் குலைக்கிறார் என்று குற்றம் சாட்டியபோது... 'இவை அனைத்தும் என்னுடைய தனிப்பட்ட விஷயம்' என்று ராதா வாதிட்டார்.

'ஒரு நாடக அரங்குக்கு நான் பணம் கொடுத்து வாடகைக்கு எடுக்கிறேன்.

குறிப்பிட்ட காலத்துக்கு அது எனக்குச் சொந்தமான அந்தரங்க இடம்.

அங்கே கட்டணம் செலுத்தி நாடகம் பார்க்க வருபவர்கள், விரும்பித்தான் உள்ளே வருகிறார்கள். நான் யாரையும் கட்டாயப்படுத்தி இழுக்கவில்லை.

என் தனி அறைக்கு விரும்பி வருகிறவர்கள், நான் மேல் சட்டையோடு இருக்கிறேனா, திறந்த உடம்போடு இருக்கிறேனா என்று கேள்வி கேட்க முடியாது.

அதுபோலத்தான் என் கட்டுப்பாட்டில் உள்ள அரங்கத்தில் நடக்கும் நாடகமும் என் விருப்பப்படியே இருக்கும்.

அதை யாரும் கட்டாயப்படுத்த முடியாது’ என்று சொன்னார்.

 ராதாவின் நாடகம் நடந்து கொண்டேதான் இருந்தது. யாராலும், என்ன செய்தும் தடுத்துவிட முடியவில்லை!



Monday, 22 October 2012

இந்தியாவில்…!



இந்தியாவில்..
நெற்றியில் நீங்கள் திலகமணிந்திருந்தால்
உங்களை யொருவரும் “நீங்கள் தமிழரா” எனக் கேட்பதில்லை.

நீங்கள் அணிந்திருக்கும் “பொட்டு” அவர்களைக் கலவரப்படுத்துவதில்லை.
அவர்களை அது அசௌகரியமடையச் செய்வதில்லை.

கூந்தலில் மலர்களைச் சூடிக்கொள்ளலாம்.
வெண்ரோசா, அலரி, மல்லிகை எதுவும்
வாசம் வீசலாம் உங்கள் கூந்தலில்….

மூக்குத்தியணிந்த பெண்களும்
காதணியணிந்த ஆண்களும்
மூக்கின் நடுவில் துளையிட்டு வளையம் தொங்கினும்
கழிசடைகளல்ல இங்கே.
கால்களில் சலங்கையணிதல் வழமையிங்கே.

இந்தியாவில் மக்கள் அதிர்ச்சியடைவது இவற்றினாலல்ல.
அவர்கள் அதிர்சியடைவது வேறு விடையங்களுக்கு:-
இரண்டு அல்லது மூன்று உள்ளூர் மொழிகளை மக்கள் அறிந்திருப்பது மிகச் சாதாரணமாக 
இருக்கும் ஒரு நாட்டில்
தமிழ்பேசத் தெரியாது என்னை நான் இலங்கையாள் என்ற போது…

பல்லினங்கள் வாழும் நாட்டில் பிறந்து வாழுமெனக்கு
இந்நாட்டின் இரு மொழிகளில் ஒன்று மட்டுமே தெரியும்.
எனக்கு நெற்றியில் திலகமிட முடியும்
கூந்தலில் பூச்சூட முடியும்
காலில் சலங்கை அணியமுடியும்
ஆனால் தமிழ்பேச முடியாது…

மூலம்: சுபா விஜேயஸ்ரீவர்த்தன (SubhaWijesiriwardena)
நன்றி:http://blogsmw.wordpress.com/2012/09/02/in-india/
மொழிபெயர்ப்பு: தேவஅபிரா

Wednesday, 5 September 2012

அவன் சாவில் பங்கு கேட்கிறாள் கிழவி! காசி ஆனந்தன் நறுக்குகள்


ஈழத்தின் புகழ் பூத்த கவிஞர்களில் ஒருவர் காசி ஆனந்தன். 

இவரது நறுக்குகள் இரண்டாம் தொகுப்பு என்ற கவிதைப் புத்தகத்தில் இருந்து சில கவிதைகள் உங்களுக்காக... 


பங்கு
எதிரிக்குத் தெரியாமல்
சோறு போடுகிறாள்
கிழவி
போராளிக்கு...

நினைக்கலாம்
நீ
அவனுக்கு
அவள்
உயிரூட்டுவதாய்
இல்லை...

அவன்
சாவில்
பங்கு
கேட்கிறாள்
கிழவி...

கூடு
சொந்த வீடு
கட்டுகிறது
குருவி...

நான்
குடியிருக்கும்
வாடகை வீட்டில்.

உறுத்தல்
நேசிக்கிறேன்
எங்கள் மண்ணின்
பறவைகளை
எங்களிலும் கூடுதலாய்...

எங்கள் மண்ணை நேசிப்பதால்

எதிரி
குண்டு வீச்சில்
எங்கள் காடுகள்
எரிந்தும்
வெளிநாடு நோக்கி
விரியாத சிறகுகள்...



Friday, 17 August 2012

'என் காலத்தில் இருந்த தமிழ்ப் பேராசிரியர்கள் போல் இப்போது இல்லை’ என்கிறார் என் ஆசிரியர். உண்மையா?


பேராசிரியர் சி.இலக்குவனார் இருந்தார். பேராசிரியர்களுக்கெல்லாம் பெரும் பேராசிரியர்.

அண்ணா அமெரிக்கா சென்றபோது யேல் பல்கலைக்கழக ஆய்வாளர்களுக்கும் போப்பாண்ட வருக்கும் கொடுப்பதற்காக இலக்குவனாரின் தொல்காப்பிய மொழிபெயர்ப்பைத்தான் கொண்டு சென்றார்.

தமிழ்நாட்டில் 1965-ம் ஆண்டு இந்தி எதிர்ப்புப் போராட்டம் நடந்தபோது இலக்குவனார், மதுரை தியாகராயர் கல்லூரிப் பேராசிரியர்.

போராட்டத்தை இவர்தான் தூண்டிவிட்டார் என்று கைது செய்து தேசியப் பாதுகாப்புச் சட்டத்தில் அடைத்தது அரசு.

'இந்தி எதிர்ப்புப் போரை நிறுத்தும் விசை, மதுரைப் பேராசிரியரிடம் உள்ளது’ என்று அப்போது அண்ணாவே பகிரங்கமாக அறிவித்தார்.

தி.மு.க. ஆட்சி வந்ததும் மாநிலக் கல்லூரியில் இலக்குவனாரை அமர்த்தினார் அண்ணா. அதன் பிறகும் அமைதியாகிவிடவில்லை இலக்குவனார்.

அன்றைய நிதி அமைச்சர் நெடுஞ்செழியன் ஆங்கிலத்துக்கு ஆதரவாக கோவை கருத்தரங்கில் பேச 'தமிழின் நாவலரா? ஆங்கிலத்தின் காவலரா?’ என்று பகிரங்கமாக எழுந்து கேட்டவர் அவர். 

1960-களின் இறுதியிலும் 70-களின் தொடக்கத்திலும் 'பேராசிரியரின் மாணவர்’ என்று பலரும் பெருமிதத்துடன் சொல்லிக்கொள்ளும் தகுதி படைத்தவராக இலக்குவனார் இருந்தார்.

தமிழ்ப் புலமையும், துணிச்சலும் ஒருங்கே பெற்ற தமிழ்ப் பேராசிரியர்கள் குறைந்து வருவதைச் சொல்லி இருப்பார் உங்கள் ஆசிரியர்!

Thursday, 19 July 2012

ஒரு சிறிய சந்தர்ப்பம் கிடைத்தால் வாழ்க்கையில் முன்னேற முடியும் என்பதற்கு எடுத்துக்காட்டு?


தெற்கு ரயில்வேயில் ஒரு குமாஸ்தா அந்த இளைஞர். சினிமாவில் நடிக்க ஒரு சின்ன  சந்தர்ப்பம் கிடைத்தால், பிரமாதப்படுத்திவிடலாம் என்ற கனவுடன் இருந்தார். 

அந்தச் சமயம், ஒரு நாடகத்தில் ஒரு நிமிடம் அல்லது இரண்டு நிமிடம் மேடையில் தோன்றி நடிக்க சிறிய சந்தர்ப்பம் கிடைத்தது. 

வயிற்று வலியால் துடிக்கும் ஒரு நோயாளியாக நடிக்க வேண்டும். நாடகத்தில் அந்தக் காட்சியும் வந்தது. 

மேடையில் காலடி எடுத்தவைத்த முதல் கணத்திலேயே 'ஐயையோ டாக்டர்... வலிக்குதே... வயிறு வலிக்குதே’ என்று அந்த இளைஞர் துடித்த துடிப்பு ஒட்டுமொத்த அரங்கத்தையும் குபுக்கெனச் சிரிக்க வைத்தது. 

அப்போது மேடையில் இருந்த வேறு எவர் மீதும் கவனத்தைப் பதியவிடாமல், 'வயிற்று வலிக்காரனை’ மட்டுமே ரசிக்கவைத்தார் அந்த இளைஞர். 

இத்தனைக்கும் கதைப் போக்கில் எந்த மாற்றத்தையும் திருப்புமுனையையும் ஏற்படுத்தக்கூடிய பாத்திரம் இல்லை அது. 

ஆனால், நாடகம் முடிந்ததும் அந்த 'வயிற்று வலிக்காரன்’ மட்டுமே ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தான். 

நாடகத்தை ரசித்த எம்.ஜி.ஆர். கையால் 'சிறந்த நடிகருக்கான’ முதல் பரிசையும் வென்றான் அவன். 

கிடைத்த சின்ன சந்தர்ப்பத்தைக் கெட்டியாகப் பற்றிக் கொண்டு தமிழ் சினிமாவையே கட்டிப் போட்ட அந்த இளைஞன்தான்.... 'நாகேஷ்’ என்றழைக்கப்பட்ட நாகேஸ்வரன்!

Saturday, 30 June 2012

தமிழக முகாம்களில் பரிதவிக்கும் ஈழத் தமிழர்கள்! ஒரு நேரடி விசிட்

தமிழ்நாட்டில் உள்ள ஈழ அகதி முகாம் ஒன்றுக்குள் வெளியாட்கள் நுழைவது என்பது மிகக் கொடுமையானது. அதையும் மீறிய நுழைவு என்பது பல கட்ட பலத்த பாதுகாப்புக்கும் மனதை புண்படுத்தும் விசாரணைகளுக்கும் உட்பட்டது.

கட்டுநாயக்காவில் நுழைந்த கரும்புலி வீரனின் மனநிலைக்கு ஒப்பானது. இவற்றையும் தாண்டி முகாம்களுக்குள் நுழைந்தால் முகாமில் வசிக்கும் ஈழத்தமிழர்களிடம் நான்கு கேள்வி கேட்க பழக முடியாது… புகைப்படம் எடுக்க முடியாது….

இப்படியாக நவீனத்துவமான வதை முகாம்கள் தான் தமிழகத்திலுள்ள ஈழத்தமிழர் அகதி முகாம்கள்.

இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் உள்ள மதுரை மாவட்டத்தில் அமைந்துள்ள உச்சம்பட்டி ஈழத்தமிழர்கள் அகதி முகாம் ஒன்றுக்கு அண்மையில் சென்றோம்.

மதுரையில் உள்ள மூன்று முகாம்களிலேயே பெரிய முகாமாக இது காணப்படுகின்றது. இங்கு 600 க்கும் மேற்பட்ட தமிழ் மக்கள் அகதிகளாக உள்ளனர்.

இவர்கள் அனைவரும் 1990 ஆம் ஆண்டே தமிழகத்துக்கு அகதியாக வந்தவர்கள்… ஆனால் சாக்கடை ஓடும் இடத்துக்கு அருகில் உள்ள சின்னம் சிறு ஓலைக் குடிசைகளில் தான் கடந்த 20 ஆண்டுகளாக வசித்து வருகின்றனர்.

முகாம் வாசலில் தமிழக விசேட பொலிஸ் பிரிவான கியூ பிரிவு பொலிசாரின் அலுவலகம் காணப்படுகின்றது.

அதற்கு வலது பக்கமாக கொஞ்சம் தள்ளி ஈழத் தமிழ் அகதி ஒருவரினால் நடத்தப்படும் தேநீர், சிற்றுண்டிக் கடை ஒன்றும் காணப்படுகின்றது. நாங்கள் மெதுவாக தேநீர் குடிக்கச் செல்வது போல தேநீர் கடைக்குச் சென்றோம்..

அங்கு வயதான ஐயா ஒருவர் இருந்தார்.. நாங்கள் அவரிடம் பேச்சுக் கொடுத்தோம்…

ஐயா இலங்கையில எந்த இடம்? “நான் தம்பி வவுனியா… 90 இல அகதியாக தமிழ்நாட்டுக்கு வந்தனாங்கள்… இப்ப வரை இங்க தான் இருக்கிறோம்… இலங்கையில இப்ப சமாதானம் என்று சொல்லுறாங்கள்… ஆனால் எங்களுக்கு அங்க போக விருப்பம் இல்லை… ஏதோ கிறிஸ் மனிதன் என்றும் பயமுறுத்துறாங்கள்.. என்று தனது ஆதங்கத்தை நம்மிடம் பகிர்ந்து கொண்டார்.. ”

அடுத்ததாக ஐயாவிடம் அம்மா புதுசா அறிவிச்ச திட்டங்கள் உதவிகள் கிடைச்சுதோ? முகாமில எப்படி வசதிகள் இருக்கு..?? என்று கேட்டோம்.. “இல்லை தம்பி… ஈழத் தமிழர்களுக்கு உதவிய கடவுள் தங்கத் தாரகை எங்கள் அம்மா என்று எல்லாம் பேப்பரில பக்கம் பக்கமாக விளம்பரங்கள் வந்து நான்கு மாசத்துக்கு மேல ஆகுது… ஆனா கூடுதலாக எந்த உதவிகளும் கிடைக்கல…

முகாமில எங்களுக்கு நாத்தத்துக்க இருந்து பழகிப் போச்சு… இப்பவும் கொட்டில் வீட்டில தான் வாழுறோம்…முகாம் பொறுப்பதிகாரி வரும் நாட்களில் முகாமிலிருந்து யாரும் வெளியில் செல்ல முடியாது… ”

தம்பி இப்ப கொஞ்சத்தில வந்திடுவாங்கள் கியூ பிராஞ்… அவங்கள் உங்களை யார் என்று கேட்டு எங்களை நோண்டி எடுப்பார்கள்… அதுக்கு முதலில வெளிக்கிடுங்கோ என்று அவசரம் காட்டினார் அந்த பெரியவர்.. அவரின் கோரிக்கையை ஏற்று அங்கு இன்னும் சிறிது நேரம் நின்றால் எங்களுக்கும் ஆப்பு தான் என்ற நிலையில் திரும்பினோம்…

முகாமில் ஒருவரைச் சந்திக்கச் சென்றால் கியூ பிராஞ்சுக்கு அவரின் பூர்வீகம், தொழில், விசா, பாஸ்போர்ட் போன்ற தனிப்பட்ட விடயங்களை துளாவும் அருகதை இல்லையே….

தனி மனித சுதந்திரத்தை மீறிய செயலாகவே இது பார்க்கப்படுகின்றது. சில பொலிஸ்காரர்கள் பிச்சை எடுக்கும் பெருமாளிடம் பிடுங்கித் தின்னும் அனுமார் கணக்காக அவர்களிடம் உள்ள காசையும் பிடுங்குகிறார்கள்..

உண்மையில் திறந்த வெளிச் சிறைச்சாலையாக தான் தமிழக அகதி முகாம்கள் உள்ளன என்பது நிதர்சனமானது…

அங்கு வெளியாட்கள் பெரிதாக போக முடியாது.. அதுவும் பத்திரிகை, மீடியாக்களைச் சேர்ந்தவர்கள் கண்டிப்பாக அனுமதி இல்லை… அங்கு புகைப்படங்கள் எடுக்க முடியாது…

இப்படியாக கடுமையான கட்டுப்பாடுகளுடன் தனித் தீவாக முகாம்கள் மாற்றப்படுள்ளன. அங்குள்ள சிறுவர்களின் எதிர்காலம் தான் உண்மையில் கவலை கொள்ள வைக்கின்றது.

நம்மூர்களில் ஊருக்கு ஒதுக்குப் புறத்தில் தரவை வெளியில் உள்ள சுடுகாடுகளைப் போன்று காணப்படுகின்றன தமிழக முகாம்கள்..

முகாம்களைச் சுற்றி காடு போல் பற்றைகள் வளர்ந்து காணப்படுகின்றன….

முகாம்களுக்கு இடையில் சிற்றாறு போல குறுக்கு மறுக்காக கழிவு நீர் பாய்ந்து செல்கின்றது.. சில இடங்களில் தேங்கியும் உள்ளது… இவை நாளடைவில் பாரிய சுகாதாரச் சீர்கேட்டை ஏற்படுத்தும் தன்மை கொண்டவை…

இவ்வாறு பல்வேறு உளவியல், உடலியல் தாக்கங்களுக்கு மக்கள் உள்ளாகின்றனர்.

மெக்கானிக் வேலையிலிருந்து இந்திய எஜமானார்களின் கக்கூசு கழுவுகிற வேலைகள் வரை கஸ்ரமான பொருளாதார நிலை காரணமாக முகாமில் வாழும் ஈழத்தமிழ் மக்கள் செய்து வருகின்றார்கள்.

இந்தியாவில் இருந்து கொண்டு தமிழீழம் கிடைக்க அரும்பாடுபட்டு வரும் வெத்து வேட்டுக் கட்சிகள் கொஞ்சம் உங்களை நம்பி வந்தவர்களின் கொட்டில்களையும் அவர்களின் சீரழிந்த வாழ்க்கையையும் போய் பார்க்கலாமே…

கடைசி அவர்களுக்காவது உதவலாமே..

தமிழக முகாம்களோடு ஒப்பிடுகையில் வன்னி முகாம்கள் எவ்வளவோ மேல் எனத் தோன்றுகிறது…